மலையகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிரதான நோக்கமாக இருந்தது. அவரது கனவை நனவாக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் தீர்மானங்களை தெரிவிக்கும்போதே அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இன ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலாக செயற்பட்ட தலைவராகவே நாம் அவரை பார்த்தோம். அவரை நீண்டகாலமாக எமக்கு தெரியும். புதிய அரசாங்கத்தில் அவரிடம் இருந்த ஒரே நோக்கம் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
இந்நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சரவைப்பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்படுகிறது. மலையக கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. எனவே அவரது மரணம் நிகழ்ந்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என்றார்.