யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமூகம் சார்ந்து என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றது என்று பல்கலைக்கழக பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் சமூகத்துக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், ஒவ்வொரு பேரவைக் கூட்டத்திலும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டம் நேற்று (மே 29) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம் கிளிநொச்சியில் அமைப்பதற்கான பிரதான நோக்கங்களில் ஒன்று அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகும். அந்தப் பணி முன்னெடுக்கப்படுகின்றதா?” என்று பேரவை உறுப்பினர் கோடீஸ்வரன் ருசாங்கன் கேள்வி எழுப்பினார்.
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் சமூகத்துக்காக முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் ஒவ்வொரு பீடாதிபதியாலும் முன்பு பேரவைக் கூட்டங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். எனினும் அண்மைய காலங்களில் அவ்வாறான அறிவிப்புகள் இல்லை. எனவே இனிவரும் காலங்களில் பீடாதிபதிகள் பேரவைக்கு இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்” என்று கலாநிதி ஆறு.திருமுருகன் கேட்டுக்கொண்டார்.