புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்..!!!


புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் அந்தப் பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதிக்குள் வேறு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் சமைத்த உணவுகள் பொதியிடப்பட்டு வழங்கப்படுகின்றன. அத்தோடு சர்வோதய நிறுவனத்தினால் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு , நயினாதீவுக்கான படகுச் சேவைகள் குறிகாட்டுவான் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டளவில் இன்று முதல் இடம்பெற்று வருகின்றன. காலை ஒரு சேவையும் மாலையில் ஒரு சேவையும் இடம்பெறுகின்றது. படகு சேவை நேரத்துக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையும் இடம்பெறுகின்றது.

குறிப்பாக தீவு பகுதிக்குள் தீவக முகவரி அடையாள அட்டையுடையவர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் பங்கேற்ற பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கும் தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் 384 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளான புங்குடுதீவு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றைய பெண் உள்பட நால்வர் நேற்று இரவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்கள்.

புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் கிராம அலுவலர்களினால் பிரதேசத்துக்குள் பயணிப்போர் அனைவரும் சோதனையிடப்பட்டு விவரங்கள் பதியப்பட்ட பின்னர் அப்பகுதியூடாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் புங்குடுதீவு பகுதியில் இருந்து எவரும் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here