மினுவங்கோடாவைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
மினுவாங்கோடாவின் யாகஹத்துவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையினை இன்று காலை முதல் மூட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மினுவாங்கொட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் சுயதனிமைப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டு வருவதாகவும் மினுவங்கோடா பொலிஸ் தெரிவித்துள்ளது.
திவூலபிட்டி பகுதியில் வசிக்கும் 39 வயது பெண்ணுக்கு நேற்றிரவு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் (ஐடிஎச்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
நாட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு சமூகத்தில் பதிவான கொரோனா வைரஸின் முதல் சம்பவம் இதுவாகும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக சில நாள்களுக்கு முன்பு கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து கம்பஹா பொது மருத்துவமனையின் ஊழியர்கள் 15 பேரும் அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 40 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெண் வைரஸ் பாதிப்புக்குள்ளான விதம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவருடன் தொடர்புடையவர்கள் இப்போது அடையாளம் காணப்படுவதாகவும் அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் மீண்டும் ஆபத்து இருக்கும் நேரத்தில், பொதுமக்களை மிகவும் கவனமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்கிறது.
Tags:
sri lanka news