கொழும்பு – யாழ் – புங்குடுதீவு வரை கொரோனா பெண் பயணித்த பேருந்து விவரம் அறிவிப்பு: அவற்றில் பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண், கொழும்பு புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6503 என்ற பேருந்தில் பயணித்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.

எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்படி இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here