கொரோனா தடுப்பூசி தொடர்பில் இதுவரை இறுதிமுடிவு எதுவுமில்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர்..!!!


தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு என்ற அடிப்படையில் தாங்கள் இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார செயலாளர் தலைமையில் கடந்த வாரம் தொழில்நுட்பக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது. தற்போது உலகில் பல தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்திலேயே உள்ளன. அவை தொடர்பில் எங்கும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, அனைத்து விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே தாங்கள் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பும் எதனையும் பரிந்துரை செய்யவில்லை.

இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தங்களால் தடுப்பூசி வழங்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், அது எந்த தடுப்பூசி என்று எமக்கு தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், எதனைவும் செய்வதற்கு முன்னதாக இலங்கையின் சுகாதார திணைக்களம் என்ற அடிப்படையில் தாங்கள் நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளாந்த பீ.சீ.ஆர். பரிசோதனைகளை 20 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரீவீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்போது கொரோனா வைரஸின் பரவல் சக்தி குறைவடைந்திருப்பதாகவும், எதிர்வரும் 2 வாரங்களில் இது மேலும் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here