வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வருகை தந்த சிலரிடம் நேற்றுப் பெறப்பட்ட மாதிரிகளில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, 25 வயதுடைய பெண் மற்றும் கற்குளியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட் -19 நோய்த் தொற்று கண்டறியப்பட்ட மூவரும் தெரிவு செய்யப்பட்ட சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். அவர்களது குடும்பங்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.