கலைகளின் ஊடாக சமூகத்தை சீர்திருத்தி நல்வழிப்படுத்தியவர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார் என பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை மரிய சேவியரின் மறைவு குறித்த இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
திருமறைக் கலாமன்ற நிறுவனர் கலாநிதி மரிய சேவியர் அடிகளார் தனது 82ஆவது வயதில் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பின் சோகத்தில் இருந்து மீள முன்னர் மற்றொரு பேரிழப்பு எம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இன்று நாம் உயிர்த்துடிப்புள்ள ஓர் கலைஞனை, நல் ஆசானை இழந்து நிற்கிறோம்.இக்கட்டான சூழ்நிலைகளிலும் கலைகளை பாதுகாத்து எம் அடுத்த சந்ததியிடம் அதனை பாதுகாப்பாக ஒப்படைத்தவர் மரிய சேவியர் அடிகளார்.
கலைகள் ஊடாகவும்,ஆன்மீக வழியிலும் சமூகத்தை சீர்திருத்தி நல்வழிப்படுத்திய ஓர் உயிர்த்துடிப்புள்ள கலைஞனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அடிகளாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உறவினர்கள் மற்றும் கலை சமூகத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு,
அடிகளார் பேணிப் பாதுகாத்த கலை இலங்கியங்களை எம் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவர் கைகளிலும் உள்ளது.என மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.