சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்ட திறன் நூலக பெயர்ப் பலகையில் தமிழ் மொழி இணைக்கப்படாமை தொடர்பில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட திறன் நூலக பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தொலைபேசி வாயிலாக நீதி அமைச்சரிடம் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சிங்கள, ஆங்கில, சீன மொழிகளுடன் தமிழ் மொழியும் நூலக பெயர்ப் பலகையில் உள்ளீர்க்கப்படும் என நீதி அமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சில செயற்பாடுகள் தமிழ் மக்கள் மனங்களில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கஜன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news