செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு ;வெளியான அதிர்ச்சி தகவல்..!!!


செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி , மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து , தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்

நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் - 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 - 5 வயதுடையதாக இருக்கும்.

அத்துடன் எஸ் - 48, எஸ் - 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத்
தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது.

செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன


அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன.

மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை.

எனவே இது சம்பந்தமான மேலதிகமான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.

செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது.

21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள்

அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here