யாழில், பாண் மற்றும் வெதுப்பக பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் தேவை தற்போது இல்லை – அரசாங்க அதிபர்..!!!


பாண் மற்றும் வெதுப்பக பொருட்களின் விலைகளை யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கான தேவை தற்போது எழவில்லையென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாண் மற்றும் வெதுப்பக பொருட்களின் விலைகள் அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்திருந்தது.ஆனாலும் கூட யாழ்மாவட்டத்தில் பாணின் விலை அதிகரிப்பதற்கான தேவை தற்போது எழவில்லை. தற்போதும் மாவின் விலை 85ரூபா முதல் 87ரூபா வரையே காணப்படுகிறது. ஆகவே அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டால் அது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு முடிவு காண முடியும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து அனுமதி வழமைபோல வழங்கப்பட்டு வருகின்றது
அவற்றை துஸ்பிரயோகம் செய்யாது அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுகின்றது.

நேற்றைய தினம் மாத்திரம் 236 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 3343 குடும்பங்களைச் சேர்ந்த 9388 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9800 ஆக அதிகரித்துள்ளது.7779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1000ற்கு மேற்பட்டவர்கள் இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேநேரம் 190 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில் நேற்றுவரை 282854 பேர் ஒரு டோஸையும், 103743 பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர். அத்துடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் எழுந்து நடமாட இயலாத முதியவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
Previous Post Next Post


Put your ad code here