எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அரச பாடசாலைகள் அனைத்து தரங்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரை அரச பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 ஆம் தரங்கள் குறித்த திகதியில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வெறியிட்டுள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டத்தின் கீழ், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் திறக்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாக க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
இறுதிக் கட்டத்தின் கீழ், மீதமுள்ள தரங்கள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நவம்பர் 22ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உள்ளன