Wednesday 12 January 2022

யாழில் உள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு..!!!

SHARE

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“பெண்ணுக்கு கற்ப்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனால் நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்ப்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.

அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE