Saturday 19 November 2022

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி..!!!

SHARE

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை(18.11.2022) மாலை யாழ்.நல்லூரில் ஆரம்பமானது.

இன்று மாலை-03.30 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற மேற்படி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகவும், இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுநிலை சிரேஷ்ட உயரதிகாரியும், பொருளாதார-சமூக ஆய்வாளருமான ம.செல்வின் இரேனியஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் ச.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் மலர் முற்றம் காட்சித் திடலை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் நா.சண்முகலிங்கன் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் கார்த்திகை மலர் அணிவிக்கப்பட்டு வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டுக் காட்சித் திடலைப் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் அரங்கேறிய நீர்வையூர் பொன்சக்தி நர்த்தனாலாய மாணவிகளின் வடமாகாண மரநடுகைப் பாடலுக்கான நடன நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

நிகழ்வில் பயனாளிகள் பலருக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம்,பாலச்சந்திரன் கஜதீபன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.கோமதி ரவிதாஸ், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள், பல்துறை சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பமான குறித்த மலர்க் கண்காட்சி எதிர்வரும்-27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாகப் பத்துத் தினங்களுக்கு காலை-8.30 மணியிலிருந்து இரவு-7 மணி வரை இடம்பெற உள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு பார்வையிட்டுப் பயனடைய முடியும் எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கண்காட்சியில் பல வகையான மலர்ச் செடிகளும், மரக் கன்றுகளும் காட்சிப்படுத்தப்பட்டுதுடன் கண்காட்சியின் ஒரு கட்டமாக விற்பனைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.






SHARE