புலமைப் பரிசில் பரீட்சையால் தள்ளிப்போகும் ஹர்த்தால்; நாளை இறுதி முடிவு..!!!


முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மனஅழுத்தம், காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ் தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் கட்சிகள், யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட வர்த்தகர் சங்கங்கள், பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஹர்த்தால் திகதி பற்றிய இறுதி முடிவை அறிவிப்பதாக, கடந்த ஓக்டோபர் 6ம் திகதி சந்திப்பின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.

எனினும், எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் போராட்டத்தை நடத்துவதற்கான முன்னாயத்தங்கள் நடந்து வந்த நிலையில் குறித்த திகதியில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஓக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவியதாக ஹர்த்தால் நடத்தப்பட்டால் அது மாணவர்களுக்கு பாதிப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தும் என்று அரசியல் தலைவர்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஹர்த்தால் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்ற பின்னரே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நாளை திங்கட்கிழமை(09) தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலும் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here