WhatsApp செயலியை நீக்குமாறு ஈரான் அரசு உத்தரவு..!!!


சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து WhatsApp செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய இராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது.

இதனையடுத்து, WhatsApp உட்பட சில செயலிகள் மற்றும் தொலைபேசிகளால் இருப்பிடத் தரவுகள் கசிந்ததன் அடிப்படையில் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, WhatsApp ஐ தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றுமாறு தனது குடிமக்களுக்கு ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று ஈரானிய அரசு தொலைக்காட்சி மக்களை தங்கள் தொலைபேசிகளிலிருந்து WhatsApp ஐ நீக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்த செயலி இஸ்ரேலிய இராணுவத்திற்கு பயனர் தகவல்களை கசியவிடக்கூடும் என்று அந்த அறிவிப்பு கூறியது. இது ஈரானில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் அச்சங்களை அதிகரித்துள்ளது.

குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த WhatsApp நிறுவனமான மெட்டா, “இந்த தவறான அறிக்கைகள் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் எங்கள் சேவைகள் தடுக்கப்படுவதற்கு ஒரு சாக்காக இருக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை. யாருக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை. நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் மொத்தத் தகவல்களையும் வழங்குவதில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here