யாழில். அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்..!!!



யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக நீதிமன்றினால் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காக அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும். எனினும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில், குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , தம் மீதான குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியசாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் என பாவனையாளர் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here