புதிய மோசடி ; வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!



பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பண மோசடிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அண்மைக் காலமாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளில் ஈடுபடுவோர், இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொள்கின்றனர்.

அதன்போது, வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்குத் தொடரப்படும் அல்லது கணக்குகள் முடக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர்.

பின்னர், "இரகசிய விசாரணை" நடைபெற்று வருவதாகக் கூறி, அதற்கு ஒத்துழைத்தால் பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும் என நம்பவைத்து, வட்ஸ்அப் மூலம் போலியான பொலிஸ் அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை அனுப்புகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீளச் செயல்படுத்த வேண்டும் என்ற பெயரில் OTP (One-Time Password) இலக்கங்களை கேட்பதுடன், வங்கிக் கணக்கில் உள்நுழைய தேவையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

மேலும், பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறோ அல்லது USDT உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் அனுப்புமாறோ அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், வங்கி அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும், "கணக்கு முடக்கப்படும்", "வழக்குத் தொடரப்படும்" போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அழைப்போ அல்லது தகவலோ கிடைத்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை. மேலும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யுமாறு கோருவதும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அறியாத நபர்களிடமிருந்து வரும் இணைய இணைப்புகள் (Links), இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலிகள் (Apps) ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புக்கு,

கணினி குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர்: 071 859 2918

கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 859 1765

கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 230 0756

மேலும், இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here