Saturday, 25 January 2025

யோஷித ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..!!!

யோஷித ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..!!!


யோஷித ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று(25) மாலை அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யோஷித ராஜபக்ஸ முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து இன்று(25) காலை கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ஸ கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

சட்ட விரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 34 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இரத்மலானை பகுதியில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறினார்.

2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை அவர் இழைத்துள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதால் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவைக்கு அமைவாக யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Friday, 24 January 2025

யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்..!!!

யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்..!!!


இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு " "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர்.

"யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" என்ற பெயர் மாற்றப்பட்டு, "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் , கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த கட்டடத்தில், " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
யாழ் . பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்..!!!

யாழ் . பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்..!!!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாணவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை , மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார். கதவினை பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது

அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும் , கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர்.

அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மாணவர்களை கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலை கழகத்தில் விரும்பிய பாடத்தை தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வில்லை அவற்றை கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்துள்ளார்கள்.

மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூத்தவை சபையோ , பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூத்தவை சபை மற்றும் பேரவை ஆகையவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பிலான அறிவித்தல்..!!!

கடவுச்சீட்டு பெறுவது தொடர்பிலான அறிவித்தல்..!!!


வௌிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முறைமையில் ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என்றும், குறித்த திகதியில் ஒருநாள் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நேற்று (23) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்றைய தினம் யாரேனும் ஒருவர் திகதியை முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார் .

இணையவழி முறைமைக்கான திகதி, 05 மாதங்களுக்கு முன்பே ஒரு திகதியில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் ,ஒதுக்கப்பட்ட திகதிக்கு முன்னர் அவசர தேவையுடையவர்களுக்கு , அவர்களுடைய தேவையைக் கருதி கடவுசீட்டுக்களை பெறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Thursday, 23 January 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது..!!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது..!!!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும், குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.



புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!!!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!!!


2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.