Thursday 15 October 2020

வயிறு வலிக்கு வைத்தியசாலை சென்றவருக்கு கொரோனா..!!!

SHARE


திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபர் ஒருவர் இரகசியமாக வேறொரு நோய் அறிகுறியை குறிப்பிட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ள நிலையில் அவருக்கு கொ​ரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் கடந்த 12 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பி சிஆர் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வயிறு வலி என தெரிவித்து கடந்த 13 ஆம் திகதி இரவு ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுமதியாகியுள்ளார்.

இதன்போது 18 ஆம் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர் தொடர்பில் ஆராய்ந்ததில் பொய்யான தகவல்களை வழங்கி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதேபோல் குறித்த நபர் யால தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ள நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்த நபர்களுக்கு covid-19 தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தொற்றாளருடன் சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 61 ஊழியர்கள் மற்றும் 61 வெளி ஊழியர்கள் தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் குறித்த ஹோட்டலின் உள்ளேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொரோனா தொற்றாளர் தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளன கொவிட் நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE