Monday 16 August 2021

40 ஆயிரம் சீன நீர்த் தேக்கங்கள் இடிக்கப்படலாம் பயனின்றி அளவுக்கு அதிகமான நீர்த்தேக்கங்கள்..!!!

SHARE

சீனா தனது மொத்த நீர் மின்சார அணைக்கட்டுகளில் சுமார் 40 ஆயிரம் நீர்த் தேக்கங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டியிருக்கும் அல்லது அவற்றை மேம்படுத்த வேண்டியிருக்கும் என்று பொது மற்றும் சூழல் விவகாரத்துக்கான பணிப்பாளர் மாஜுன் தெரிவித்துள்ளார். போதிய திட்டமிடலின்றி இந்நாட்டின் நதிகள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவோசே டொங் காலத்தில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான நீர்த்தேக்கங்கள் சீன நதிகளெங்கும் போதிய திட்டமிடலின்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னரும் பல நீர்த் தேக்கங்கள் மின்சாரம், குடிநீர், பாசனத்துக்காக அமைக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் நீண்ட நதியான யாங்ட்சின் குறுக்கேயும் அதன் கிளை ஆறுகளிலும் பத்து மாகாணங்களை உள்ளடக்கியதாக 24 ஆயிரம் நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 930 நீர்த் தேக்கங்கள் சூழல் மதிப்பீடுகள் மேற்கொள்ளாமல் அமைக்கப்பட்டவையாகும். சீனாவின் நீர் வள அமைச்சின் மதிப்பீட்டின் பிரகாரம் இவற்றில் சில கடும் வௌ்ள வீச்சைத் தாங்க முடியாதவை. 1951 க்கும் 2011 க்கும் இடையே 3,515 நீர்த் தேக்கங்கள் இடிந்துள்ளன. 1975 ஆம் ஆண்டு பெய்த ஆறு மணித்தியால கடும் மழையின்போது ஹெனான் மாகாணத்தின் பென்குயாவோ அணை உட்பட 61 அணைகள் இடிந்து விழுந்தன. இவ்விபத்தில் 2 இலட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் சிக்கி உயிரிழந்தனர்.

சுற்றுச்சூழலியலாளர்கள் அளவுக்கு அதிகமான நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டதால் சூழல் மாசு ஏற்பட்டிருப்பதாகவும் விலங்கு, பறவை, மீன்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வரட்சி காரணமாக பல அணைகள் நீர் நிரம்பாத அணைகளாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். வௌ்ளத் தடுப்பின் பொருட்டு 1980 களில் வெயிஸிஷுயி கிராமத்தில் அமைக்கப்பட்ட 68 மீற்றர் உயர நீர்த்தேக்கம் இன்றுவரை வௌ்ளமே வராத நிலையில் பயனற்று காணப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
SHARE