Sunday 19 September 2021

கறுப்புப் பூஞ்சண நோய் சமூகத் தொற்றாக பரவும் ஆபத்து நிறைந்ததா?

SHARE

மியூகோமைகோசிஸ் என்பது கறுப்பு நிறத்தில் வாழும் பூஞ்சையாகும் (பூசணம் அல்லது பூஞ்சணம்). இந்த பூசணத் தொற்றானது நல்ல உடல் நிலையில் உள்ள, நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் யாருக்கும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குன்றிய நிலையில் உள்ள ஒருவருக்கே இது ஏற்படும்.

இந்த பூஞ்சணம் வெளி இயற்கை சூழலில் பொதுவாகவே காணப்படும் ஒன்றுதான் . இதன் வித்திகள் காற்றில் பரம்பி இருக்கும். ஒருவர் காற்றில் வரும் இதன் வித்திகளை (Spores) சுவாசிப்பதன் மூலம் உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவர்களுடைய மூக்கு, நாசி , மேல் அண்ணம் ,முகத்தில் உள்ள காற்றறைகள்(சைனஸ்),கண்கள் ஆகிய பகுதிகளில் தொற்றிக் கொள்ளும்.

இது பின்னர் உள்ளுறுப்புகளைத் தாக்கி ஆபத்தினை உண்டாக்கும். இதன் போது ஒருவர் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் குணமாக்கலாம் ஆனால் மூளை வரை இதன் பாதிப்பு சென்றால் உயிர் இழக்க வேண்டியும் ஏற்படலாம்.

இந்த பூஞ்சணம் இலங்கைக்கு ஒன்றும் புதியது கிடையாது. இலங்கை மருத்துவர்களும் இந்த நோயாளிகளை இனங்கண்டு சிகிச்சை வழங்கி வருகின்றனர். நாட்டில் கடந்த வருடம் சுமார் நாற்பது நோயாளிகள் இந்த நோய் காரணமாக சிகிச்சை பெற்றனர். இவர்கள் எவரும் கொவிட் தொற்றுடன் சம்பந்தமானவர்கள் கிடையாது. எனவே இதுவும் கொரோனா போன்ற ஒரு புதிய பயங்கரமான தொற்று எனும் அச்சத்தினை மக்கள் விட்டுவிட வேண்டும். உண்மையில் இது ஒரு மனிதனின் இருந்து இன்னும் ஒருவருக்கு கூட தொற்றக் கூடிய நோயும் அல்ல.

யாருக்கெல்லாம் இந்த கறுப்புப் பூஞ்சை ஏற்படலாம் எனப் பார்ப்போம். கட்டுப்பாடில்லாத இரத்த சீனி அளவுகளைக் கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளிகள், சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இந்த தொற்று குறித்து அவதானமாக இருக்க வேண்டும். அதிலும் கொரோனா தொற்று குணமாக ஸ்டீராய்ட் எனும் எதிர்ப்பு சக்தியை குறைய செய்யும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் கூடுதல் அவதானமாக இருத்தல் வேண்டும்.

மேலும் நீண்ட கால ஸ்டீராய்ட் சிகிச்சை பெறும் ஏனைய நோயாளிகள், அதிக நாட்கள் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் இருந்து சிகிச்சை பெற்றவர்கள், ஒக்சிஜன் சிகிச்சை பெற்றவர்கள் போன்றவர்கள் அவதானத்துக்க உரியவர்களாவர்.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்பதனை இனிப் பார்ப்போம். முகத்தோலில் நிற மாற்றம் , கறுப்பு நிற திட்டுக்கள், மூக்கடைப்பு, முகம் மற்றும் கன்னத்தில் அதிக வலி, வாய் மற்றும் மூக்குக்குள் கறுப்பு புண் தோன்றுவது, கண் பார்வை இல்லாமல் போதல் அல்லது கண்பார்வை மங்குதல், காய்ச்சல் ,சுவாசப் பிரச்சினைகள் என்பன இதன் அறிகுறிகளாகும்.

சரியான நேரத்தில் இனம் கண்டால் இந்த பங்கஸ் நோயை நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், சத்திர சிகிச்சை மூலம் குணமாக்கலாம். உண்மையில் இந்த நோய் ஒருபோதும் சமூக பரம்பலை ஏற்படுத்தும் நோய் அல்ல. கொவிட் தாக்கத்தின் பின்னர் ஒருசிலரில் இலங்கையிலும் இது ஏற்படலாம். தற்போது ஏற்பட்டது உறுதிப்படுத்தபட்டும் உள்ளது. இதற்காக தனியான தடுப்பு முறைகளோ, தடுப்பூசியோ இல்லை.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதன் மூலமும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும், ஏனைய நோய்களுக்கு சரியான சிகிச்சை பெற்று கொள்வதன் மூலமும் இதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
SHARE