Saturday 26 March 2022

முடித்து வைத்த சென்னைக்கு ஆரம்பத்தில் பதிலடி கொடுத்த கொல்கொத்தா : மலிங்கவின் சாதனை முறியடிப்பு..!!!

SHARE

இண்டியன் பிறீமியர் லீக்கின் 14ஆவது அத்தியாயத்தை கடந்த வருடம் முடித்து வைத்த சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இந்த வருடம் ஆரம்பித்துவைத்த 15 ஆவது அத்தியாயத்தில் பதிலடி கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் கடந்த வருட இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிடம் அடைந்த தோல்வியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிவர்த்திசெய்துகொண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி நடப்பு சம்பியன்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 131 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து அஜின்கியா ரஹானே, அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் கொல்கத்தாவின் வெற்றியை இலகுபடுத்தின.

ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ரவிந்த்ர ஜடேஜா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்ப வீரர்களை குறைந்த எண்ணிக்கைக்கு இழந்த து. அனுபவசாலியும் முன்னாள் அணித் தலைவருமான எம். எஸ். தோனி, புதிய அணித் தலைவர் ஜடோஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்திரா விட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிலை மோசமடைந்திருக்கும்.

தோனி 38 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களுடனும் ஜடேஜா 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இவர்கள் இருவரை விட ரொபின் உத்தப்பா 28 ஓட்டங்களைப் பெற்றார்.

கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி கொல்கத்தாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அஜின்கியா ரஹானே (44), வெங்கடேஷ் ஐயர் (16) ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து நிட்டிஷ் ரானா (21), ஷ்ரேயாஸ் ஐயர் (20 ஆ.இ.), சாம் பில்லிங்ஸ் (25) ஆகியோர் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

சென்னை பந்துவீச்சில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ட்வேன் ப்ராவோ, இண்டியன் பிறீமியர் லீக்கில் 170 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் இண்டியன் பிறீமியர் லீக்கில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின சாதனையை ப்ராவோ சமன் செய்தார்.
SHARE