Friday 10 June 2022

உக்ரைனின் தானியங்களை விடுவிப்பதற்கு தீவிர முயற்சி..!!!

SHARE

உக்ரைனியத் துறைமுகங்களில் சிக்கியிருக்கும் மில்லியன் கணக்கான தொன் தானியங்களை வெளியே கொண்டுவரும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தபோது உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை அது மூடிவிட்டது.

அதன் காரணமாக உக்ரைனால் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. துருக்கி நாட்டின் உதவியோடு ரஷ்யாவுடன் பேரம்பேச ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகிறது. பொருளாதார தடைகளை நீக்கினால் தானியங்களை வெளியே கொண்டுவரலாம் என்று ரஷ்யா குறிப்பிடுகிறது.

தானியங்களை ஏற்றுமதி செய்யப் பாதை ஒன்றை ஏற்பாடு செய்தாலும் அதைப் பாதுகாப்பானதுதான் எனக் கப்பல் நிறுவனங்களும் காப்புறுதி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்வது சிரமம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனில் அடுத்த அறுவடைக் காலம் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. அதற்குக் குறுகிய காலமே இருப்பதால் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்யப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உலக கோதுமை விநியோகத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மூன்றில் ஒரு பங்கை வகிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதித் தடை மற்றும் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பாதகமான காலநிலையால் பயிர் செய்கையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ரஷ்யா மற்றும் உக்ரைனின் முக்கியத்துவத்தை காட்டுவதாக உள்ளது.

போருடன் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகள் காரணமாக தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் வலுசக்தி துறை யில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது ஏழை நாடுகளில் பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சில நாடுகள் தமது கோதுமை இறக்குமதியில் பாதிக்கு அதிகமான பங்கை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE