
QR முறை அல்லது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் நாளை (1) முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இதன் பின்னர் செல்லுபடியாகாதென அமைச்சு அறிவித்துள்ளது.
வாகனத்தின் chassis இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களை பயன்படுத்துவோர் இன்று முதல் வருமான உரிம எண்ணுடன் பதிவு செய்துகொள்ள முடியும்.
அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மின்பிறப்பாக்கிகள்,தோட்டக்கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களை பயன்படுத்துவோர் தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தெரிவு ஆகியவற்றை அந்ததந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல வாகனங்களைக் கொண்ட வணிகங்கள், அனைத்து வாகனங்களையும் தமது வணிக பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முடியும்.
பொதுப்போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, சாலைகளூடாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீதி அனுமதிப்பத்திரம் மற்றும் சேவையில் ஈடுபடும் கிலோ மீட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு விநியோகிக்கப்படவுள்ளது.
பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில், சுற்றுலாத்துறை, அம்பியூலன்ஸ் வாகனங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளின் எரிபொருள் தேவைகள் இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் ஊடாக முன்னெடுக்கப்படும்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அம்பியூலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும் எனவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பொலிஸ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து ஒதுக்கப்பட்ட கோட்டாவை பெறுவதற்கான சந்தர்ப்பம் வாரம் முழுவதும் கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்து வைப்போர், விற்பனை அல்லது எரிபொருள் விநியோக அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிரப்பு நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை 074 21 23 123 எனும் இலக்கத்திற்கு whatsapp ஊடாக அனுப்பிவைக்க முடியும்.
தொடர்ந்தும் குற்றங்களை இழைப்போருக்கு QR அணுகலைத் தற்காலிகமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்காக ஒதுக்கப்பட்ட கோட்டாவை பெற்றுக்கொள்ள, ஒரு வார காலஅவகாசம் காணப்படுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று நெரிசலை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.