செம்மணி மனித புதைகுழி தொடர்பான AI படங்களை பரப்புபவர்களுக்கு சட்டநடவடிக்கை..!!! (Video)



சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை (AI) பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது

இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் இன்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால் இன்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Previous Post Next Post


Put your ad code here