காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்..!!!


காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின் போதும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் வழங்கலில் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. அத்துடன் உரிய களஞ்சிய சாலை வசதிகளும் காணப்படவில்லை.

இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காங்சேன்துறையிலுள்ள எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது.

இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாள்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையின் புனரமைப்புக் காரணமாக, இவ்வளவு காலமும் அநுராதபுரத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன.

இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான கோரிக்கை கிடைத்தும் சில நாள்களின் பின்னரே எரிபொருள் வந்துசேர்ந்தது. இதனாலேயே, கடந்தகாலங்களில் தாமங்கள் ஏற்பட்டிருந்தன. இனி உடனுக்குடன் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதால் விநியோகத் தாமதத்தால் எரிபொருள் வரிசைகள் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here