புனித நோன்பு காலப்பகுதியில், வறிய மக்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின்போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவமானது பொலிஸார் நிலைமைகளை அறிந்திருந்த நிலையில் இடம்பெற்றது என ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (28) நீதிமன்றுக்கு அறிவித்தார்.
குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவர் இதனை நீதிமன்றில் அறிவித்தார்.
இதன்போது நீதிமன்றில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரிக்கையை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, குறித்த சம்பவத்தில் பொலிஸார் நீதிமன்றுக்கும், ஊடகங்களுக்கும் தவறான, பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பம் முதல் பொலிஸார் அறிந்திருந்ததாக கூறிய அவர், அதனைத் தடுக்க பொலிஸார் எவ்வகையிலும் முயலவில்லை எனவும், தெரிவித்ததுடன் பொலிஸார் குறித்த இடத்தில் மக்கள் ஒன்று திரள்வதை அறிந்திருந்தனர் என்பதை உறுதி செய்யக் கூடிய சி.சி.ரி.வி. காணொளி ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.