Sunday 1 November 2020

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு மற்றொரு ஆறுதல் வெற்றி; பஞ்சாபின் இறுதிச் சுற்று வாய்ப்பு அற்றுப்போனது..!!!

SHARE


சென்னை சுப்பர் கிங்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையில் அபு தாபி ஷெய்க் ஸய்யத் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 53ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று ஆறுதல் அளித்த அதேவேளை, தோல்வி அடைந்த கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி ஏமாற்றத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

சென்னை சுப்பர் கிங்ஸ் ஏற்கனவே இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடம் இரண்டு அணிகளினதும் கடைசி ஐபிஎல் போட்டியாகவும் இது அமைந்தது.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 154 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ருத்துராஜ் கய்க்வாட், பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் 59 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

டு ப்ளெசிஸ் 34 பந்துகளை எதிர்கொண்டு 48 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டமிழந்தார்.

ஆனால், ஆரம்ப வீரர் ருத்துராஜ் கய்க்வாடும் அம்பாட்டி ராயுடுவும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியை இலகுபடுத்தினர்.

கய்க்வாட் 62 ஓட்டங்களுடனும் ராயுடு 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஆட்டநாயகனான ருத்துராஜ் கய்க்வாட், தொடர்ச்சியாக 3ஆவது ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த கிங்ஸ் இலவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.அணித் தலைவர் கே.எல். ராகுல், மயான்க் அகர்வால் ஆகிய இருவரும் 32 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால்,  4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராகுல் (29), அகர்வால் (26), கிறிஸ் கேல் (12), நிக்கலஸ் பூரன் (2) ஆகிய நான்கு முக்கிய விக்கெட்கள் வீழ்ந்ததால் கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆட்டங்கண்டது.

மொத்த எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது மந்தீப் சிங்கும் (14),  ஓட்டங்கள் கழித்து ஜேம்ஸ் நீஷாமும் (2) ஆட்டமிழக்க கிங்ஸ் இலவன் பஞ்சாப் மேலும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது

.அதுவரை 18 பந்துகளில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த தீப்பக் ஹூடா, துணிச்சலுடன் அதிரடியில் இறங்கி அடுத்த 12 பந்துகளில் மேலும் 34 ஓட்டங்களை தனது எண்ணிக்கைக்கு சேர்த்து 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

மறுபுறத்தில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்த கிறிஸ் ஜோர்டனுடன் வீழ்த்தப்படாத 6ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹூடா, கிங்ஸ் இலவன் பஞ்சாப் 150 ஓட்டங்களைக் கடக்கவும் உதவினார்.சென்னை சுப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் லுங்கி நிகிடி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
SHARE