Monday 18 January 2021

முல்லைத்தீவு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிப்பு ; விகாரை அகழ்வாராய்சி இன்று ஆரம்பம்..!!!

SHARE


தமிழ் மக்களுக்கு சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதி சிவன்- ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலை மற்றும் மணலாறு – படலைக்கல்லு ஆகிய இடங்களில் இரண்டு பழமைவாய்ந்த பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (ஜன.18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகள் ஆரம்பமும் புத்தர் சிலை அமைக்கும் வழிபாட்டிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

மணலாறு படலைகல்லு பகுதியிலும் கல்யாணபுரத்திலும் விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இன்றைய தினம் அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

59 ஆவது படைப்பிரிவின் 591ஆவது பிரிகேட்டினால் ஏற்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன .

இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலையை சூழ நாட்டப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம் வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்களின் வழிபாட்டு தலமாக குருந்தூர் மலையில் பழமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உள்ளது. அங்கு சென்று அயல் கிராம மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் நேற்றைய தினம் குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

குருந்தூர்மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தாக்கல் செய்ய வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் 2018இல் கட்டளை ஒன்று வழங்கப்பட்டது.

“குருந்தூர் மலையில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம். அங்கு எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது.

தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம். வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது.

தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

 

18.01.2021

30.08.2015


 

SHARE