Friday 25 March 2022

பாகுபலி சாதனையை முறியடிக்குமா ஆர்.ஆர்.ஆர்..!!!

SHARE

இந்தியத் திரையுலகத்தை பிரமிக்கவைத்து சர்வதேச சினிமா வியாபாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் வசூல் இந்திப் படங்களின் வசூல் வரலாற்றை முறியடித்து இப்போது வரையிலும் முதலிடத்தில் உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக இன்று வெளியாகவுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் 'பாகுபலி 2' படத்தை காட்டிலும்அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக விலைக்கு வியாபாரமாகியுள்ள படம்.

ஆந்திரா, தெலங்கானாவில் சிறப்பு சலுகையாக இப்படத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள மாநில அரசுகள் அனுமதி வழங்கியிருக்கிறது, அதனால், இரண்டு மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வசூல் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற மொழிகளில் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதற்கு அதற்கான முன்பதிவுகளே சாட்சியாக உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, வட இந்திய மாநிலங்களில் படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை . இந்தப் படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கதை. படத்தில் தெலுங்கு சாயல் அதிகம் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் 'பாகுபலி 2' படத்தில் அவர்களுக்குத் தெரிந்த அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் இருந்தார்கள்.

மேலும் 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய படங்களை தமிழிலும் நேரடியாகப் படமாக்கியதாக அப்போது படக்குழு அறிவித்தது. ஆனால், ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கில் மட்டுமே நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாக சமுத்திரக்கனி மட்டுமே இருக்கிறார். இந்தி ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தெரிந்த முகங்களான ஆலியா பட், அஜய் தேவ்கான் ஆகியோர் உள்ளார்கள்.

இருப்பினும் படத்தின் புரமோஷனுக்காக வெளியான வீடியோக்களில் அவர்களுக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது.

உலகம் முழுவது ஆர்ஆர்ஆர் படத்திற்காக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி போன்று இதுவரை வேறு எந்தவொரு இந்தியப் படத்திற்கும் நடைபெற்றதில்லை. அனைத்து நிகழ்ச்சிகளிலும் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ராஜமவுலி ஆகியோர் மட்டுமே முழுமையாகக் கலந்து கொண்டனர். ஆலியா பட் சில இடங்களுக்கு மட்டுமே சென்றார். படத்தின் போஸ்டர்களில் கூட ராம்சரண், ஜுனியர் என்டிஆர் தவிர மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை .பாகுபலி' படங்களின் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்பே மக்களை கவர்ந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் 'நாட்டு' பாடல் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆர்ஆர்ஆர் படம் ஓடும் நேரம் 3 மணி நேரம் 2 நிமிடம். அவ்வளவு நேரம் படத்தைப் பார்க்க பொறுமை வேண்டும்.

படத்தின் உருவாக்கம்,மிகப் பிரம்மாண்டமாக, டெக்னிக்கலாக மிரட்டலாக உள்ளது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றியும், வசூலும் பெற முடியும் பிரம்மாண்டம் மட்டுமே வெற்றியை தராது என சமீபத்தில் வந்த 'ராதேஷ்யாம்' மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிலை என்ன என்பது சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். ரசிகர்களை படம் திருப்திப்படுத்தினால் 'பாகுபலி 2' படத்தை விடவும் வசூல் சாதனை செய்யும் என்கிற எதிர்பார்ப்பு வணிக வட்டாரத்தில் கூறப்படுகிறது. படைப்புரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் இந்திய சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்க்கும் ஆர்ஆர்ஆர் படம் என்கிற இயக்குநர் ராஜமெளலியின் நம்பிக்கை நிஜமாகட்டும்.
SHARE