Sunday 23 August 2020

ஓவியத் திறமையினால் தொழில் உத்தரவாதம் பெற்ற மாணவன் ..!!!

SHARE
முஹமட் ஜூமைல் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் இறுதியாண்டில் கற்கும் மாணவராவார். கற்கும் காலத்திலேயே பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும் இவர் தனது ஓவியத் திறமையால் பெயர்பெற்று வருகிறார். இலங்கையின் பொதுக் கல்வித்துறையின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக சுட்டப்படுவது கற்கும் காலத்திலேயே மாணவர்கள் தொழிற்கல்வியை பெற்றுக்கொள்வதில்லை என்பதேயாகும். ஆனால் இந்த மாணவர் கற்கும் காலத்திலேயே தனது இயல்பான ஆற்றலை நிபுணத்துவமாக வெளிக்கொணர்ந்து தொழிலுக்கான உத்தரவாதத்தினை பெற்றுள்ளார். இந்த மாணவரின் முயற்சிகளையும் திறமைகளையும் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக கொண்டு தேசியத்தில் இவர் பகிரங்கப்படுத்தப்படுவதை தினகரன் வாரமஞ்சரி பெருமை கொள்கிறது.

உங்களுக்கு ஓவியத்துறையில் நாட்டம் ஏற்பட்டதற்குரிய காரணங்களாக எதனைக் கருதுகின்றீர்?

என் தந்தை வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியராக கடமையாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கடதாசி ஆலையின் மீள் சுழற்சிக்காக கொண்டு வருகின்ற கழிவுக் கடதாசிகளில் இலங்கையின் நாலாபுறமிருந்தும் வந்து சேருகின்ற உருவங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை எனது நன்மை கருதி என் தந்தை வீட்டுக்கு கொண்டு வருவாhர். அவை என் மனதை கவர்ந்தன. அப்போது நான் வாழைச்சேனை அநநூர் தேசிய பாடசாலையில் தரம்- 6ல் கல்வி பயின்று வந்தேன். அரபு எழுத்தணிகள் மற்றும் உருவ அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட கடதாசி மீதான என் நாட்டமும் அவற்றைப் போல வரைய முடியாதா? என்கின்ற என் தொடர் வேட்கையும் என்னை ஓவியம் வரைதலின் பால் நாட்டம் கொள்ள வைத்தன. குறிப்பாக எனது தாயும் சிறிது காலம் சித்திரப்பாட ஆசிரியையாக ஒரு பாடசாலையில் கடமையாற்றி வந்தார். இந்நிலையில் அவரால் கொண்டு வரப்படும் சித்திரப்பாடத்திற்கான ஆசிரியர் கைநூல் மற்றும் அரச வழிகாட்டல் ஆவணங்களை வாசிப்பதோடு இலகுவில் சித்திரம் வரைதலுக்கான நுட்ப முறைகளையும் நான் இளமையிலேயே கற்றும் கொண்டேன்.

நீங்கள் உயர்தரப் பிரிவில் சித்திரப்பாடத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன என்று குறிப்பிட முடியுமா?

பொதுவாக நாட்டிலுள்ள முஸ்லிம் மாணவர்கள் உயர்தர கலைப் பிரிவில் சித்திரப் பாடத்தை அதிகம் விரும்புவதில்லை. இதனால் கலைநயத்தை ரசிக்கத்தெரியாத பசுமை உள்ளங்களை கொண்டிராத மாணவர் சமூகமாகவே எமது மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். சித்திரப் பாடத்தை எடுத்துக் கொள்வதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான தெரிவின் போது இலகுவாக தமது இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற ஆசையும் முஸ்லிம் பிரதேச பாடசாலைகளில் கடும் தட்டுப்பாடாக இருந்துவரும் சித்திரப்பாட ஆசிரிய நியமனங்களை நிவர்த்திக்கலாம் என்பதோடு ஓட்டமாவடி கோட்ட கல்விப் பிரிவில் எதிர்காலத்தில் அதிகமான முஸ்லிம் மாணவர்களுக்கான சித்திர வழிகாட்டியாக மாற வேண்டும் என்ற நன்னோக்கிலேயே இவ்வாறு உயர்தர கலைப் பிரிவில் சித்திரப் பாடத்தை எடுத்துக்கொண்டேன்.



நீங்கள் ஓவியத்துறைக்காக பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் சான்றிதழ்களைப்பற்றி குறிப்பிட முடியுமா?

தரம் 9ல் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் கனிஷ்ட பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டமைக்காக நான் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். அத்துடன் அல்-கிம்மா சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் நான் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதனால் சவூதி அரேபிய நாட்டு ஓவியக்கலைஞர்களால் நான் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் வனபரிபாலன திணைக்களமும் இணைந்து நடாத்திய “வனரோபா -2018” சுவரொட்டி போட்டியில் முன்றாமிடத்தை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்தேன். தேசிய மீலாதுன் நபிவிழா போட்டியை முன்னிட்டு 2017ல் நடைபெற்ற ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளுக்கிடையேயான போட்டியில் அரபு எழுத்தணி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டேன். 2018ல் கோறளை மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட அரபு எழுத்தணிப் போட்டியிலும் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டேன். குறிப்பாக வாழைச்சேனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நடாத்தப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்கான போட்டியிலும் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டேன். இலங்கை வான்படையின் 68வது வருட நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போடடியில் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியில் 7ம் இடத்தை பெற்றுக்கொண்டதோடு மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டமையால் இலங்கை வான்படையின் அதிகாரிகளால் ஹிங்குராகொடையில் வைத்து சான்றிதழும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.

நவீன ஓவியத்தின் பால் உங்களுக்கு நாட்டம் ஏதேனும் உண்டா?

நேரடியாக கருத்துணர வைக்காத ஓவியங்கள் தற்போது உலகளவில் அதிக வரவேற்புக்களை பெற்று வரும் நிலையில் என்னால் வரையப்பட் சில சுவரோவியங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன. குறிப்பாக தூரிகைகளை பயன்படுத்தாமல் வேறு உபகரணங்களைப் பயன்படுத்தியும் விரல்களைப் பயன்படுத்தியும் சீமெந்து செதுக்கல் நுட்ப முறைகளையும் பயன்படுத்தி சில நண்பர்களின் வீடுகளில் இவ்வாறான ஓவியங்களை வரைந்துள்ளேன். நீர் வர்ணம் மற்றும் எண்ணெய் வர்ணம் ஆகிய நுட்பத்தில் அதிக ஓவியங்களை வரைந்துள்ளேன். எந்த தொனிப்பொருளும் அற்ற நிலையின் மனதில் தோன்றும் கனவுநிலை காட்சிகளையும் குறிப்பாக தற்செயலான நிலைகளில் வரும் ஓவியமாக வரைந்துள்ளேன்.

நீங்கள் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலையின் நன்மை கருதி ஏதேனும் சித்திரங்களை வரைந்ததுண்டா?

உயர்தர வகுப்பு இறுதியாண்டு மாணவனாக தற்போது பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருப்பதால் கல்வியமைச்சின் கட்டளைக்கமைய எங்கள் வகுப்பாரின் குழுவேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எமது பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கருத்து வெளிப்பாட்டு ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளேன். அத்துடன் தனிக் கறுப்பு வர்ணத்தினால் வரையப்படும் நிழல்படங்களும் மண்டபம் முழுதும் வரைந்துள்ளேன். தனது வகுப்பறையின் கட்டடங்கள் முழுவதும் கலைநுட்பத்தால் அலங்கரித்து கொடுத்துள்ளேன். எனது பாடசாலை எனது சித்திரங்களால் உயிர்பெற்று எழுந்துள்ளமையை என்னால் காண முடிகின்றது.

உங்கள் ஓவியத்திறமையை எதிர்காலத்தில் தொழில் நிபுணத்துவமாக மாற்ற முடியுமா?

நிச்சயமாக முடியும். ஓவியக் கலைஞர்கள் பிரதேசத்தில் அருகிக் கொண்டு வரும் நிலையில் நமக்கு கிடைத்த இவ்வாறான திறமைகளை பயன்படுத்தி விளம்பர பதாகைகள் விழாக்கள் கலை நிகழ்வுகள் என்பவற்றில் வரைந்து உழைக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது. ஓவியக் கண்காட்சிகளை பிரதேச கலாசார அதிகார சபையினர் மற்றும் பிரதேச கலாசார அமைப்புக்களின் ஒத்துழைப்பின் பேரில் நடாத்தி இதற்காக மக்கள் அங்கீகாரத்தை பெற்றிட முடியும். இதற்காக ஊரிலுள்ள கலை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் எனக்கு தரும் ஒத்துழைப்பிலேயே அது தங்கியுள்ளது. குறிப்பாக மீலாதுன் நபி விழாக்கள் கொண்டாடப்படும் தினங்களில் அரபு எழுத்தணிக்கலையில் அமைந்த ஓவியங்கள் மற்றும் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களை காட்டும் மரபுத்துறைகளை நான் காட்சிப்படுத்துவதனூடாக முஸ்லிம் இளைஞர்களின் வீணான பணவிரயங்களை தவிர்த்து இவ்வாறான கண்காட்சிக்கு வழிசமைப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். சில நண்பர்களின் திருமண வீடுகளை ஓவியத்தின் பால் அலங்கரிப்பதாலும் பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரஸா அரபுக்கல்லூரிகளில் இஸ்லாமிய அரபு எழுத்தணிகளை வரைந்து கொடுப்பதனால் தொழில் உத்தரவாதத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

தற்போது வீடுகளை வர்ணங்களினால் அழகுபடுத்தல் என்பது தனியொரு கலையாக முகநூல் வழியாக பகிரப்படுகின்றது. நீங்கள் இவ்வாறு வீடுகளில் வர்ண அழகு செய்ததுண்டா?

எனது நண்பர்களின் வீடுகளில் அதாவது அவர்களது பெற்றோரின் சம்மதத்தில் வர்ண அழகுபடுத்தல் வேலைகளை தனியொரு ஆளாக நின்று செய்துள்ளேன். நிழற்படங்களை வரைந்தது மட்டுமல்லாமல் பேப்பர் டேப்பினால் செய்யக்கூடிய அலங்காரங்களையும் செய்து கொடுத்துள்ளேன். இத்தனையும் என் நண்பர்களின் வீடுகள் என்பதாற்காகத்தான் .ஆனாலும் நான் ஒரு பாடசாலை மாணவன் என்ற படியாலும் இன்னும் சொற்பகாலமே பாடசாலையில் இருக்க வேண்டிவரும் என்பதாலும் நான் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. எனது பாடசாலை வாழ்க்கை நிறைவுக்கு வந்ததும் எனது ஓவிய ஆற்றலுக்கு பேரம் பேசுவேன். இது நியாயமும் அல்லவா?

SHARE