Tuesday 20 October 2020

பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றுக்கு ஜனவரி முதல் தடை..!!!

SHARE


2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிப்புக்களுக்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்காக 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், 20 மைக்ரோன் இற்குக் குறைவான பொலித்தீன் உற்பத்தி தடை செய்தல், பொலித்தீன்களால் உணவு ஒற்றும் உற்பத்திகளைத் தடை செய்தல், பொலித்தீன் திறந்த நிலப்பரப்பில் எரியூட்டல் தடை செய்தல் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதோடு பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன்களுக்குப் பதிலாக மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.

பொலித்தீன், பிளாஸ்ரிக் முகாமைத்துவம் தொடர்பான பங்குதார நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் உடன்பாடுகளுக்கமைய ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் (Single – Use) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் கீழ்வரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் தடை செய்யவும், அதற்குப் பதிலான மாற்று வழிகளை அடையாளங் காண்பதற்கும் சுற்றாடல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• Poly Ethylene Terephthalate (PET) மற்றும் Poly Vinyl Chloride (PVC) பொதிகளில் இரசாயனப் பொருட்களோ கிருமிநாசினிகளைப் பொதியிடல் தடை, மாற்று வழிமுறையாக கண்ணாடி அல்லது வேறு மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட பொதிகளைப் பயன்படுத்தல்

• 20 மில்லிலீற்றர்/ 20 கிராம்களுக்குக் குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இனால் தயாரிக்கப்பட்ட சிறிய பக்கற்றுக்களைத் தடை செய்தல், (உணவு மற்றும் மருந்துகள் தவிர்ந்த) மற்றும் மாற்று வழிமுறையாக 100 மில்லிலீற்றர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு அதிகமான பக்கற்றுக்களைப் பயன்படுத்தல

• பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட காற்று அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் (Inflatable Toys) தடை செய்தல், (பலூன், பந்து வகைகள் மற்றும் நீரில் மிதக்கும் விளையாட்டுப்பொருள்கள் தவிர்ந்த) மற்றும் அதற்கான மாற்று வழிமுறையாக சுற்றாடல் நேயமிகு ஆரோக்கியமான மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தல்

• பிளாஸ்ரிக் காதுத்துடைப்பு (Cotton Bud) தடை செய்தல் (சுகாதாரச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்கள் தவிர்ந்த) மற்றும் மாற்று வழிமுறையாக உக்கலடையக் கூடிய மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட காதுத் துடைப்பு (Cotton Bud) பயன்படுத்தல்

• அனைத்துவித பிளாஸ்ரிக் உற்பத்திகளின் மீள் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பரிந்துரை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் இனை அடையாளங் காணும் வகையில் 1-7 வரையான குறியீடு பொறித்தலை கட்டாயமாக்கல்.

SHARE