Sunday 17 January 2021

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இல்லை..!!!

SHARE


எதிர்வரும் 21 ஆம் திகதி சுற்றுலாத்துறைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாது எனவும், 90 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு சுற்றுலாப்பயணிகள் வெளியேறும் வசதிகளை செய்து கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து விமான நிலையத்தை முழுமையாக திறக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு நாளைக்கு மூவாயிரம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்தறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக இலங்கைக்கு வர விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தமது உடல் தகுதியை உறுதிப்படுத்தியே இலங்கைக்கு வரவேண்டும் எனவும், இலங்கையில் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர்  90 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி தாம் பதிவு செய்துள்ள ஹோட்டல்கள், வாடி வீடுகள் ஆகியவற்றிற்கு செல்ல முடியும் எனவும் சுற்றுலாப்பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளாத வண்ணம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  

எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவில் இருந்து எவரும் இலங்கைக்கு வர முடியாது எனவும், பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களை இலங்கையில் தரையிறக்க அனுமதிக்க மாட்டோம் என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  

SHARE