Thursday 1 September 2022

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்..!!!

SHARE

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (Under the Extended Fund Facility) வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது.

நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு இணங்க 48 மாதங்களுக்கு (04 ஆண்டுகள்) இந்த 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் தொடர்புடைய நீடிக்கப்பட்ட வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய இலங்கைக்கான சிரேஷ்ட நடவடிக்கைகளின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் நடவடிக்கைகளின் தலைவர் மசகிறோ நொசாகி ஆகியோரின் தலைமையில் இலங்கை மத்திய வங்கி தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டிய கடனை மீள் கட்டமைப்பு செய்வது, கடனாளிகள் மற்றும் கடன் உரிமையாளர்களுக்கு இடையே இந்நாட்களில் மேற்கொள்ளப்படும் ஒப்புதலை ஏற்படுத்துவதற்கான திட்டங்களின் நெகிழ்வு போக்கு மற்றும் திறன் தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாக ஊடகங்கள் முன்னிலையில் சர்வதேச நாணய நிதிய சிரேஷ்ட நடவடிக்கைகளின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.

இலங்கை முகம்கொடுத்துள்ள பாரிய பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய கடன் மீள்கட்டமைப்பு மற்றும் அரச பிரிவுகளில் மேற்கொள்ளக்கூடிய சீர்திருத்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுவதற்கு அரசாங்கம் செயல்படும் விதம் தொடர்பாகவும் தங்களது நிதியம் அக்கறையுடன் உள்ளதாக ப்ரூவர் தெரிவித்தார்.

4 மாதங்களுக்கு முன்னர் வொஷிங்டனில் சந்தித்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஒகஸ்ட் 24ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இந்நாட்டில் தங்கி இருந்து

பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 48 மாதங்களுக்காக இந்த உடன்படிக்கை தயாரிப்பு தீர்மானம்மிக்க கலந்துரையாடல் சுற்றுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகவும் அதன் பின்னரே இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும் பீற்றர் ப்ரூவர் இங்கு தெளிவுபடுத்தினார்.

வரி சீரமைப்பு, அரசு நிதி பிரிவுகளின் செயல் திறனை அதிகரித்தல், வரி செலுத்துவதை தவிர்ப்பதை தடுத்தல், வரிமுறைகளை இலகு படுத்தல் உள்ளிட்ட அரச வருமானங்களை அதிகரிப்பதற்கு நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளுடன் எதிர்கால பயணத்தை தொடர்வதற்கு இலங்கை அதிகாரிகள் செயல்பட வேண்டியுள்ளது என சிரேஷ்ட நடவடிக்கை தலைவர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திலிருந்து அரச வருமானத்தை அதிகரித்து அரச செலவை கட்டுப்படுத்தி பேரின பொருளாதார இலக்கை வெற்றி கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதோடு நிவாரணம் தேவைப்படும் குழுவினருக்கு சமூக பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கல் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும் என நிதியத்தின் நடவடிக்கை தலைவர் மசகிரோ நொசாக்கி தெரிவித்தார்.
SHARE