Friday 23 October 2020

யாழில் கட்டட தொழிலாளி தற்கொலை பொலிசார் மீது உறவினர்களுக்கு சந்தேகம்?

SHARE


யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு பொலிசாரே காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை - சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபர் குடத்தனை மேற்கு விளாங்காட்டுப் பகுதியில் தண்ணீர் தாங்கி ஒன்று அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீர் தாங்கி அமைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொட்டி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் சில இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போனதாக தெரிவித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு இந் நபரை கொண்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே இவர் நேற்று தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தமக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் கூறுகையில்,

விசாரணைக்காக அழைத்துச் சென்று தன்மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாக தொலைபேசியில் எமக்கு கூறியிருந்தார். அங்கிருந்து காணாமல் போன பொருட்களுக்கும் தனக்கும் எதுவித தொடர்பில்லை எனவும் ஆனால் பொலிசார்  வெள்ளிக்கிழமையும் மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் தற்கொலை செய்துள்ளார் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சம்பவ இடத்திற்கு சென்று இருந்தார். எனினும் அவரின் உறவினர்கள் இச் சம்பவத்தில் சந்தேகமிருப்பதாக தெரிவித்த நிலையில் பருத்தித்துறை நீதிமன்றினால் விசாரணை மேற்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE